வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை–அபாயகரமான கழிவுகள் உற்பத்தியாகும் 32 ஆயிரம் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் பல்வேறு வகையான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும்போது, அதில் எத்தகைய கழிவுகள் உருவாகும்; அதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆராயப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தொழில் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது.
தவிர்க்க முடியாத சிலசமயங்களில், சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவுகள் உருவாகும் என்று தெரிந்தும், கழிவு மேலாண்மைக்கான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.இதில், அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் தனியாக பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கண்காணிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:நாடு முழுதும் தற்போதைய நிலவரப்படி, 32 ஆயிரம் நிறுவனங்களில் அபாயகரமான கழிவுகள் உருவாவது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனங்களை கண்காணிப்பதற்காக தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில மாசு கட்டுப்பாட்டு நிறுவனங்கள், இந்த ஆலைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த வகை ஆலைகளில் மூலப்பொருட்கள் கொள்முதல், உற்பத்தித் திறன் ஆகியவற்றை தினசரி கண்காணிக்கவும், அபாயகரமான கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்கின்றன என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும், இத்தகைய நிறுவனங்கள் குறித்த விபரங்களை, மத்திய அரசு முழுமையாக வெளியிட மறுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement