போபால்: போபாலில் நிலம் தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகன் தொடுத்த வழக்கின் அடிப்படையில், நடிகையும், எம்பியுமான ஜெயா பச்சனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள செவானியா கவுர் பகுதியில், சமாஜ்வாதி கட்சி எம்பியும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கு 5 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய இந்த நிலத்தை விற்பதற்கு, ராஜேஷ் ஹிருஷிகேஷ் யாதவ் என்பவருக்கு ஜெயா பச்சன் அதிகாரம் கொடுத்துள்ளார். முன்னதாக பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர தாகாவின் மகன் அனுஜ் தாகா என்பவருக்கு மேற்கண்ட சொத்தை ஜெயா பச்சன் விற்பது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக ரூ.1 கோடி ரொக்கம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் சிக்கலால், நில விற்பனை ஒப்பந்தத்தை ஜெயா பச்சன் ரத்து செய்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அனுஜ் தாதா, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் ஜெயா பச்சனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் ஏப். 30ம் தேதிக்குள் மனு மீதான பதிலை சமர்பிக்குமாறும், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ஜெயா பச்சனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அனுஜ் தாகாவின் வழக்கறிஞர் ஜார்ஜ் கார்லோ கூறுகையில், ‘ஜெயா பச்சன் ஒப்புக்கொண்ட தொகையை விட அதிக விலை கோரியதால் அனுஜ் தாகாவுக்கும், அவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ. 1 கோடியை முன்பணமாக ஜெயா பச்சனுக்கு அனுஜ் தாகா கொடுத்துள்ளார். அந்தத் தொகை ஜெயா பச்சனின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பணம் அனுஜ் தாகாவின் கணக்கிற்குத் திரும்பியது. பின்னர், பேரம் பேசிய தொகையை விட ஏக்கர் நிலத்துக்கு ரூ. 2 கோடி அதிகமாகக் கேட்டு, ஜெயா பச்சன் பிரச்னை செய்துள்ளார். இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படி கிரிமனல் குற்றமாகும். எனது கட்சிக்காரருக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையிலான ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டது; மேலும் ரூ.1 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அவரது கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை வரும் 30ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் ஜெயா பச்சன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.