கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஓ.டி.டி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ’பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் அதுவும் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
பிக் பாஸ் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்டு திறமையாக விளையாடிய வனிதா விஜயகுமார், சிநேகன், ஜூலி, அனிதா சம்பத், தாமரை, நிரூப், பாலா உள்ளிட்ட போட்டியாளர்களே இங்கும் போட்டியாளர்களாகக் களம் கண்டனர்.
சேனலில் தொகுத்து வழங்கிய கமலே அல்டிமேட்டையும் தொகுத்து வழங்க வந்தார். ஆனால் இடையில் தன் படங்களின் ஷூட்டிங் தடைபடுவதாகக் கூறி பாதியிலேயே அவர் வெளியேற அவருக்குப் பதில் நிகழ்ச்சிக்குள் வந்தார் சிம்பு.
பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த அடுத்த சில தினங்களிலேயே தொடங்கிய நிகழ்ச்சி மற்றும் விளையாட்டின் ஃபார்மெட் தெரிந்த போட்டியாளர்கள் என்பன போன்ற விஷயங்கள்தான் காரணமோ என்னவோ, ஆரம்பத்திலிருந்தே நிகழ்ச்சிக்கு சுமாரான வரவேற்பே கிடைத்து வந்தது.
நிகழ்ச்சி தொடங்கி வழக்கமான எவிக்ஷனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுருதி 15 லட்சம் எடுத்துக் கொண்டு சில தினங்களுக்கு முன் வெளியேறினார்.
ஒருவழியாக 70 நாள்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நடந்தது.
இறுதிச் சுற்றில் நிரூப், தாமரை, ஜூலி, வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன், பாலா, அபிராமி என மொத்தம் ஆறு பேர் இருந்தனர். இவர்களில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் பாலாவுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த நிலைமை மாறி, நிரூப் ரம்யா பாண்டியனை முந்த, பிறகு நிரூப் மற்றும் பாலாவுக்கிடையில் டைட்டிலுக்கான ரேஸ் தொடங்கியது.
சிம்பு கலந்து கொண்ட கடைசி நாள் ஷூட்டிங் நேற்று பின்னிரவு வரை நீண்டது. கடைசியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் டைட்டிலை வென்று ‘பிக் பாஸ் அல்டிமேட்’டின் முதல் டைட்டில் வின்னர் என்கிற பெருமையைப் பெற்றார் பாலா.
நிரூப் மற்றும் பாலாவுக்கிடையிலான ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைந்த அளவுதான் என்கிறார்கள்.
பாலா நடிகர் ஆரி டைட்டில் வென்ற பிக் பாஸ் சீசன் 4ல் இரண்டாமிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா டைட்டில் வென்ற எபிசோடு இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது.