‘நாங்கள் இன்னும் எங்களின் பெஸ்ட்டை வெளிக்காட்டவில்லை. இனிதான் எங்களின் ஆட்டத்தையே பார்க்கப்போகிறீர்கள்’ என்கிற தொனியில், கடந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் வெறியாட்டம் ஆடிய பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்தார். நான்கே நாள்களுக்குள் அடுத்த போட்டியிலேயே ‘இதுதான் உங்க பெஸ்ட்டாய்யா?’ எனக் கேட்கும் அளவுக்கு கொல்கத்தா ஆடி முடித்திருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே சொதப்பி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். ஈவ்னிங், நைட் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல் தற்போதைய ட்ரெண்ட்படி சேஸிங்கையே தேர்வு செய்தார். டெல்லி முதலில் பேட்டிங் ஆடியது. பிரித்திவி ஷாவும் வார்னரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். லக்னோவிற்கு எதிரான கடந்த போட்டியில் பிரித்திவி ஷா பட்டாசாய் வெடிக்க, வார்னர் ஒரு முனையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் இருவருமே இணைந்த கைகளாக அடித்து வெளுக்கத் தொடங்கினர். பர்ப்பிள் தொப்பியை வைத்திருக்கும் பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டான உமேஷ் யாதவின் முதல் ஓவரிலிருந்தே பிரித்திவி ஷா வெடிக்கத் தொடங்கினார். முதல் பந்தையே எக்ஸ்ட்ரா கவருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையில் பவுண்டரியாக்கியிருந்தார். இங்கிருந்து பேட்டை வீசத் தொடங்கியவர்கள், நான் ஸ்டாப்பாக வெளுத்தெடுத்தனர். 6 ஓவர்களிலுமே பவுண்டரிகள் வந்திருந்தன. உமேஷ் யாதவ் தான் வீசிய 2 ஓவர்களிலேயே 24 ரன்களைக் கொடுத்திருந்தார். கடந்த 4 போட்டிகளிலும் 4 ஓவர்களிலேயே சராசரியாக இவ்வளவு ரன்களைத்தான் கொடுத்திருந்தார். அவருடைய எக்கானமியே 5-ஐ சுற்றித்தான் இருக்கிறது. ஆனால், இங்கே ஓவருக்கு 12 ரன்களைக் கொடுத்ததால் இரண்டே ஓவரில் உமேஷை கட் செய்தார். பேட் கம்மின்ஸும் ஒரே ஓவரில் 16 ரன்களைக் கொடுத்திருந்தார். இதனால் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என்ற தங்களின் பிரம்மாஸ்திரங்களை பவர்ப்ளேக்குள்ளேயே கொண்டு வந்தனர்.
ஆனால், எந்த பௌலிங் மாற்றமும் வார்னரையும் பிரித்திவி ஷாவையும் தடுக்கவே இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களை பிரித்திவி பொளந்து கட்ட, வார்னர் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என ரகரகமாக அடித்து பவுண்டரிக்கள் ஆக்கியிருந்தார்.
ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் என்கிற ரீதியில் டெல்லியின் ரன்விகிதம் கூடிக்கொண்டே இருந்தது. இந்த சமயத்தில்தான் வருண் சக்கரவர்த்தி வீசிய 9 வது ஓவரில் பிரித்திவி ஷா ஸ்டம்ப்பைப் பறிகொடுத்து அவுட் ஆனார். வார்னரும் பிரித்திவியும் முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 93 ரன்களை எடுத்திருந்தனர்.
நம்பர் 3 இல் கடந்த போட்டியில் ரோவன் பவல் இறங்கியிருந்தார். இந்தப் போட்டியில் கேப்டன் ரிஷப் பண்டே இந்த நம்பர் 3 இல் இறங்கினார். இதேமாதிரிதான் கடந்த போட்டியிலும் பிரித்திவி அகிரடியாக நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருப்பார். ஆனால், பின்னால் வந்த பண்ட் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 108 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடியிருப்பார். அந்த பெர்ஃபார்மென்ஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் போட்டியில் அந்தத் தவறுக்கான பரிகாரத்தைத் தேடும்பொருட்டு க்ரீஸுக்குள் வந்ததிலிருந்தே அடிக்க ஆரம்பித்தார். இவரும் வருண் சக்கரவர்த்தியை வைத்து பிறுத்தெடுத்தார். பேட் கம்மின்ஸ், ரஸல் போன்றோர்களையும் சிக்சருக்குப் பறக்கவிட்டார். இடையில் டேவிட் வார்னர் அரைசதத்தைக் கடந்திருந்தார்.
ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் வார்னர், பண்ட் இருவருமே விக்கெட்டை விட்டனர். ரஸலின் பந்தில் பண்ட் அவுட் ஆக, உமேஷ் யாதவின் பந்தில் வார்னர் அவுட் ஆகியிருந்தார். இவர்களோடு ரோவன் பவல், லலித் யாதவ் போன்றோரும் விக்கெட்டை விட டெல்லியின் ரன்ரேட் அப்படியே சரிய தொடங்கியது. 16, 17, 18 ஆகிய 3 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே வந்தது. கடந்த போட்டியை போன்றே கடைசிக்கட்ட ஓவர்களில் டெல்லி சொதப்புகிறதோ எனத் தோன்றிய நிலையில், கடைசி 2 ஓவர்களில் மீண்டும் சூடுபிடித்தது.
உமேஷ் யாதவ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் வீசிய 19 மற்றும் 20 இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் வந்திருந்தது. குறிப்பாக, உமேஷ் யாதவ் வீசிய 19வது ஓவரில் 23 ரன்கள் வந்திருந்தது.
ஷர்துல் தாக்கூர் இரண்டு சிக்சர்களையும் அக்சர் படேல் ஒரு சிக்சரையும் அடித்திருந்தார். உமேஷ் யாதவிற்கு டெத் ஓவர் பௌலிங்தான் பலவீனமான விஷயம். அதனால் அந்தக் கடைசிக்கட்ட ஓவர்களில் உமேஷை பயன்படுத்தாமல் அவரை பவர்ப்ளேயிலேயே கொல்கத்தா பிரதானமாக பயன்படுத்தியது. முதல் 4 போட்டிகளிலும் சேர்த்தே 16-20 ஓவர்களில் வெறும் 1 ஓவரை மட்டுமே வீசியிருந்தார். இதனால் உமேஷின் பந்துவீச்சும் பயங்கர தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. பர்ப்பிள் தொப்பியையும் வென்றார். ஆனால், இந்த ஒரு போட்டியில் மட்டும் டெத் ஓவர்களில் 2 ஓவர்களை வீசியிருந்தார். அதற்கான பலனை கொல்கத்தா அனுபவித்தது. உமேஷுக்குப் போட்டியளிக்கும் வகையில் பேட் கம்மின்ஸ் கடைசி ஓவரை வீச, அந்த ஓவரில் 16 ரன்கள் வந்திருந்தன. கடைசி பந்தை ஷர்துல் தாக்கூர் சிக்சரோடு முடித்தார். டெல்லி அணி 215 ரன்களை எட்டியது.
மும்பைக்கு எதிராக 150 சேஸிங்கிற்கே பேட் கம்மின்ஸ் உட்பட கொல்கத்தா பேட்டர்கள் அந்த அடி அடித்திருந்தனர். 216 சேஸிங் என்பதால் வெறியாட்டம் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நிகழவே இல்லை. முஷ்டபிசுர் வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்துகளிலுமே விக்கெட்டை இழக்கும் அபாயத்திலிருந்து ரஹானே தப்பித்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஹானை நின்று ஒரு ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். இல்லை அவரை ஒரு முனையில் நிறுத்தி விக்கெட்டை காத்துக் கொண்டு மற்ற பேட்டர்கள் அதிரடியாக ஆடியிருக்க வேண்டும். ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூரின் பந்தில் சில சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். கலீல் அஹமதுவின் பந்தில் ஓப்பனர்களான ரஹானே மற்றும் வெங்கடேஷ் இருவருமே அவுட் ஆகியிருந்தனர். இதன்பிறகு, உள்ளே வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை வெளு வெளுவென வெளுத்து அரைசதம் அடித்தார். ஆனால், இவரும் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடவே இல்லை. குல்தீப் யாதவின் பந்தில் இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆனார்.
குல்தீப் யாதவ் இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிந்தார். அவர் வீசிய 16வது ஓவரில் மட்டும் கம்மின்ஸ், நரைன், உமேஷ் யாதவ் ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.
குல்தீப் யாதவ் கடந்த ஒன்றிரண்டு வருடமாக அவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் ஆடியிருக்கவில்லை. அவருக்குச் சரியான வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை. கொல்கத்தா அணியில் பென்ச்சிலேயே வைக்கப்பட்டிருந்தார். இந்திய அணியிலும் அஷ்வினை விட உயர்வாகப் பேசப்பட்டு, பின்பு திடீரென ஓரங்கட்டப்பட்டிருந்தார். காயங்களும் அவரை படாத பாடு படுத்தியிருந்தன. அந்தச் சரிவிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு வெறித்தனமான கம்பேக்கை குல்தீப் கொடுத்திருக்கிறார். கலீல் அஹமதுவும் அட்டகாசமாக வீசியிருந்தார். இவர்களின் பெர்ஃபார்மென்ஸால் ரஸலும் கம்மின்ஸுமே அடக்கி வாசிக்க நேர்ந்தது. கொல்கத்தா 171 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது.
இனிதான் எல்லாமே இருக்கு. எங்களுடைய பெஸ்ட் இனிதான் வரப்போகிறது என ஸ்ரேயாஸ் கூறியிருந்தார். அந்த பெஸ்ட் இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக வெளிப்பட வேண்டிய நேரத்தில் வெளிப்படவில்லை. சீக்கிரமே அந்த பெஸ்ட்டை வெளிக்கொண்டு வாங்க ஸ்ரேயாஸ்!