Tamil Nadu News Updates: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றத்தில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் கான் ஆகும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர்
இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 4வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.
ஆர்சிபி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியது பெங்களூர் அணி. சிஎஸ்கே அணியை போலவே, மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர்ந்து 4ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
மழை அப்டேட்
வெப்பச் சலனம் காரணமாகஏப்.10-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,258 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுச்சேரி, காரைக்கால், சென்னை உட்பட 6 இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் , கேரளா, புதுச்சேரியில் பிரெஞ்சு குடிமக்கள் 4,564 பேர் அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், மேலும் 19 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் டவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்ட நிலையில், யுஜிசி ட்விட்டரை இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.