`அசைவ உணவு சாப்பிட்டதற்காக தாக்குவதா?’- ஜே.என்.யு மாணவர் கலவரம் தொடர்பாக சீமான் கண்டனம்

அசைவ உணவு உண்டதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மற்றும் வலதுசாரி மாணவர்களிடையே மோதல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இடதுசாரி மாணவர்கள், ஏபிவிபி அமைப்பினர் மீது அசைவம் சாப்பிடக்கூடாது என தாக்கியதாக ஏபிவிபி மீது புகார் கொடுத்துள்ளனர். அதேநேரம், தங்களது ராமநவமி பூஜையை தடுத்து அவர்களே தங்களை தாக்கியதாக இடதுசாரி மாணவர்கள் மீது வலதுசாரி மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இரு தரப்பினரும் கற்கள் வீசியும், டியூப்லைட் கொண்டும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொண்டனர். அதில் காயமடைந்த மாணவ, மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில மாணவர்கள் பேரணியாக சென்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
image
இரு அமைப்புகளின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இடதுசாரி மாணவர்களுக்கு ஆதரவாக, `அசைவ உணவு உண்டதற்காக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொடூர தாக்குதல் தொடுத்துள்ளனர். தனிமனித உரிமையில் தலையிடுவது கண்டனத்துக்குரியது’ என அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கும் கண்டனத்தில், `உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களை சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து இடையூறு செய்வதும், அதனை காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும்.
image
பாஜக-வின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்தே இதுபோன்ற மோதல்களும் தாக்குதல்களும் இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழான செயல்களாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல சி.பி.ஐ.எம்.எல். தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.