பொதுவாகவே திராவிடம், திராவிட அரசியல்மீது உங்களுக்கு ஒரு முரண் கருத்து உள்ளது. ஏன்?
தமிழக அரசியலில் தமிழியக்க அரசியல் என்று உண்டு. அது தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழ் பதிப்பியக்கம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதில் குறிப்பாக தனித் தமிழ் இயக்கத்தில் எனக்கு மிகத் தீவிர ஈடுபாடு உண்டு. தமிழில் தனித்தமிழில் எழுதக்கூடிய எழுத்தாளன் நான். சிலப்பதிகாரத்தில் உள்ள சமஸ்கிருதம்கூட என்னுடைய ‘கொற்றவை’ நாவலில் இருக்காது. ‘வெண்முரசு’ நூலில் நூறு சதவிகிதம் தமிழ்ச் சொல் மட்டுமே பயன்படுத்தி இருப்பேன். ஒரு வார்த்தைகூட அதில் பிறமொழிக் கலப்பு இருக்காது.
எல்லோரும் அண்ணாதுரை தனித் தமிழில் பேசினார் என்று கூறுவார்கள். ஆனால் தமிழில் மிக அதிகமாக சமஸ்கிருதம் கலந்து பேசியது அண்ணாதான். மு.கருணாநிதியின் ஆரம்பக்கட்ட எழுத்துக்களைப் பார்த்தால், அதில் பெரும்பாலும் சமஸ்கிருதம்தான் இருக்கும். ஏனென்றால், ஒரு அரசியல்வாதி தனித்தமிழில் பேசினால் அது எளிய மக்களுக்குச் சென்று சேராது. அப்போது, ஏதேனும் ஒரு அறிவியக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படும்போது, அதில் ஒரு திரிபு உள்ளது. ஒரு சமரசம் உள்ளது. ஒரு வீழ்ச்சி உள்ளது. அந்த சமரசம் அல்லது வீழ்ச்சிமீது எனக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தைத்தான் தொடர்ந்து முன்வைக்கிறேன். இதுதான் திராவிட இயக்கத்தின் மீதுள்ள என் விமர்சனம். தமிழியக்கம் உருவாக்கிய மனநிலைகளையும், அதன் உணர்ச்சி நிலைகளையும் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் ஆதிக்கத்தைப் பிடித்த ஒரு இயக்கமாக தான் நான் திராவிட இயக்கத்தைப் பார்க்கிறேன்.
பல எழுத்தாளர்கள் தலைவர்கள்மீது விமர்சனம் வைக்கும் நீங்கள், ஏன் தொல்.திருமாவளவன் மீது மட்டும் விமர்சனம் வைப்பதில்லை?
திராவிட இயக்கம் மீது நான் வைக்கும் விமர்சனம் எல்லாம் பண்பாட்டு விமர்சனமே ஒழிய, அது எதுவும் அரசியல் விமர்சனம் கிடையாது. ஏனென்றால் நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. பண்பாட்டு தளங்களில் அவர்கள் என்ன செய்தார்கள், செய்யவில்லை, என்ன தவறவிட்டார்கள் என்பதைத்தான் பேசுவேன். அதேபோல திருமாவளவனிடம் நான் அரசியல் கருத்து பேச விரும்பவில்லை. பண்பாட்டுத் தளத்தில் அவருடைய இடம் என்ன என்பதைத் தான் நான் பார்க்கிறேன். நான் அரசுத் துறையில் தொழிற்சங்கத்தில் பணியாற்றினேன். அப்போது 1985 காலகட்டத்தில் காவல்துறையில் மாதக் கடைசியில் வழக்கு இல்லையென்றால், அருகிலிருக்கும் தலித் சிறுவர்களைப் பிடித்து சிறிய வழக்கு போடுவார்கள். அப்போது அந்தச் சிறுவர்கள் எங்களது தொழிற்சங்கத்தில் வேலை பார்க்கும் யாருக்காவது தெரிந்தவனாயிருந்தால் நாங்கள் சென்று அழைத்துவந்துவிடுவோம். ஆனால் மற்றவர்களை அழைத்து வர அங்கு ஆள் இல்லை. 90-கள் வரைக்குமே இதுதான் தமிழகத்தின் நிலைமையாக இருந்தது.
இப்போது அவர்களுக்கென ஒரு தலைமை வந்திருக்கிறது. அதனால் இன்றைக்கு அவர்களை இப்படிச் செய்யமுடியாது. இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகள் என்று பல கட்சிகள் இருந்தன. இவ்வளவு இருந்தும் அவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தன. ஏனென்றால் அவர்களுக்கென ஒரு இயக்கமோ, கட்சியோ, குரலோ அப்போது இல்லை. இன்று அவர்களுக்கென ஒரு குரல் பிறந்துள்ளது. அந்தக் குரல் முக்கியமானது. அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால் பலர் அரசியல் தலைவர்களாக வேண்டிய தேவை அவர்களுக்குதான் இருக்கிறது. ஆனால் திருமா அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் அவருக்குக்கிடையாது. அந்த மக்களுக்கானது. நம்முடைய தார்மீகத்தை நோக்கிப் பேச வேண்டிய தகுதி அவருக்கு இருக்கிறது. அதனால் அவர் இந்தக் காலகட்டத்தினுடைய முக்கியமான அரசியல் தலைவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவருடைய அரசியலை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் ஒரு அரசியல் விமர்சகன் கிடையாது. தமிழ்நாட்டில் மு.கருணாநிதிக்குப் பின் புத்தகம், எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்த ஒரு அரசியல்வாதி திருமாதான். என்னதான் இருந்தாலும் அரசியலில் அறிவுஜீவி என்பது ஒரு தனித் தகுதிதானே!
சினிமாவில் எழுதுவதற்கும் இலக்கியப் படைப்புகளை எழுதுவதற்குமான வித்தியாசமாக எதைப் பார்க்கிறீர்கள்?
சினிமாவை ஒரு எடுத்தாளுகைக் கலை என்று சொல்வார்கள். ஒரு கர்நாடக சங்கீதம் 3 மணி நேரம் கொண்டது. ஆனால் அதிலிருந்து வெறும் 3 நிமிடம் மட்டுமே சினிமாவில் ஒரு பாட்டாக வருகிறது. சினிமாவில் நான் ஒரு எழுத்தாளன் கிடையாது. இயக்குநர்தான் ஒரு சினிமாவின் ஆசிரியர். அந்த இயக்குநருக்குப் புகைப்படக்காரர்கள் ஒரு உதவி செய்கிறார்கள், இசையமைப்பாளர் ஒரு உதவி புரிகிறார். அதுபோல அங்கு ஒரு எழுத்தாளனுடைய பங்களிப்பு ஒன்று இருக்கிறது. அது அந்த சினிமாவிற்கு ஒரு மொழி வடிவத்தைக் கொடுக்கிறது. கதாபாத்திரங்களுக்கு ஒரு மொழி வடிவினைக் கொடுக்கிறது. சம்பவங்களுக்கு ஒரு மொழி வடிவினைக் கொடுக்கிறது. இந்தப் பங்களிப்பை நான் அளிக்கின்றேன். அதுதான் சினிமாவில் எனக்குரிய இடம்.
சினிமாவில் நீங்கள் நினைத்தைச் சாதிக்க முடிந்ததா?
இங்கு சினிமாவில் நான் எதையுமே சாதிக்க வரவில்லை. நான் ஆரம்பத்தில் BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட நூறு மடங்கு பெரிய ஊதியம் சினிமாவில் கிடைக்கும். இப்போது உலகம் முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன். நிறைய இலக்கிய அமைப்புகள் அமைத்துள்ளேன். இந்த விஷயங்களை செய்வதற்கு சினிமாதான் எனக்குப் பொருளாதார ரீதியாக உதவியாக உள்ளது. சினிமா இல்லையென்றால் இன்று விஷ்ணுபுரம் அமைப்பு இருந்திருக்காது. சினிமா இல்லையென்றால் இன்று என்னால் ‘வெண்முரசு’ எழுதியிருக்கமுடியாது. இதுதவிர சினிமாவில் நான் பெரும்பாலுமான நேரம் இயக்குநர்களுடன் தான் பணியாற்றுவேன். எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு காலகட்டத்தில் எழுத்தாளனாக வேண்டிய ஆசை இருந்திருக்கும். அதனால் மற்ற எழுத்தாளர்கள்மீது அவர்கள் காட்டும் அணுகுமுறை மிகவும் மரியாதை கலந்ததாகதான் இருக்கும். ஆகவே எனக்கு ஒரு மரியாதையான உற்சாகமான வேலை சூழல் சினிமாவில் கிடைக்கிறது. அந்த வேலை சூழல் எனக்கு BSNL-ல் பணியாற்றும்போது இருந்தது கிடையாது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்து….
‘பொன்னியின் செல்வ’னுக்கு நான் வேலை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிறது. தற்போது அந்தத் திரைப்படத்தின் அனிமேஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் சிறப்பாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
உங்களின் மிகப்பெரிய படைப்புகளுக்குப்பின் உள்ள பலமே உங்களின் ஆய்வுகள் தான். அந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உங்களின் முயற்சிகளும், உழைப்பும் எப்படி சாத்தியமாகிறது?
ஒரு படைப்பிற்காக ஆய்வு செய்வது என்பது மிகவும் கடினம். அதிலேயே வாழ்வதுதான் அதற்கான வழி. உதாரணத்திற்கு என்னுடைய ‘கொற்றவை’ நாவலையே எடுத்துக்கொள்ளலாம். சிலப்பதிகாரத்தை நான் முதலில் படிப்பது பள்ளிக் காலத்தில். நான் அதை முறையாக கவிராயர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதன் பிறகு குறைந்தது 15 முறையாவது சிலப்பதிகாரத்தைப் படித்திருப்பேன். பின்பு நீண்ட காலத்திற்குப் பிறகு, கேரளத்தில் `நல்லமதோற்றம்’ எனும் நாட்டுபுறப் பாடலைப் பார்க்கிறேன். அது சிலப்பதிகாரத்தினுடைய நாட்டுப்புற வடிவம். அதன்பின்பு தான் எனக்குப் புரிந்தது சிலப்பதிகாரம் இலக்கியத்திற்கு முன்னரே அதனுடைய நாட்டுபுற வடிவம் வந்தது என்று. அதைத் தழுவித்தான் இலக்கியம் உருவானது. இதிலிருந்து எனக்கு ஒரு நாவல் எழுத வேண்டுமென்று உத்வேகம் பிறக்கிறது. 1983-ல் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பித்தேன். 2003-ல் தான் நாவல் எழுத ஆரம்பிக்கிறேன். அந்த இடைப்பட்ட 20 வருடத்தில் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருந்தேன். கோவை ஞானியிடம்கூட இதுகுறித்து நிறைய விவாதித்திருக்கிறேன். ‘வெண்முரசு’ நாவலுக்காக இருபத்தைந்து இடங்களுக்கு மேல் பயணித்திருக்கிறேன். இமயமலை அடிவாரத்திலிருந்து, மகாபாரதம் நடந்ததாய்ச் சொல்லப்படுகிற இடங்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன். இப்போதுகூட ‘தென்திசைப் பயணம்’ எனும் தலைப்பில் சுடலைமாடன் பயணங்கள் குறித்து நாவல் எழுதலாம் என்று ஆய்வு செய்துக்கொண்டிருக்கிறேன். இதை நான் எழுதலாம், எழுதாமலே போகலாம். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆய்வு என்பது தினம் தினம் நடக்க வேண்டும்.