இந்தியாவிலேயே அதிக மதிப்பீட்டை கொண்டிருக்கும் முதல் பத்து நிறுவனங்களில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இடம்பிடித்துள்ளது.
துறைமுகம், எண்ணெய் துரப்பணம், உள்கட்டமைப்பு, மாற்று எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி நிறுவனம் கால் பதித்து கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக அதானி குழுமத்துக்கு கீழ் செயல்படும் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பானது, 16.25 சதவீதத்தில் இருந்து 19.99 சதவீதமாக இன்று திடீரென அதிகரித்தது. இதனால் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.2,701.55-இல் இருந்து ரூ.2,788.70- ஆக உயர்ந்தது. இதன் காரணமாக, அதானி கிரீன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4.22 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இதையடுத்து, நாட்டிலேயே அதிக மதிப்பீட்டை கொண்டிருக்கும் முதல் பத்து நிறுவனங்களில் 10-வது இடத்தை அதானி கிரீன் நிறுவனம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலாம் இடத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் (ரூ.17.65 லட்சம் கோடி) உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டிசிஎஸ் (ரூ.13.52 லட்சம் கோடி), ஹெசிஎஃப்சி (ரூ.8.29 லட்சம் கோடி), இன்ஃபோசிஸ் (ரூ.7.43 லட்சம் கோடி) உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM