நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த சசிகலாவுக்கு கோயில் சார்பில் அர்ச்சணை தீபராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின் கோயில் உட்பிரகாரம் வலம் வந்த சசிகலா கோயிலை விட்டு புறப்பட்டுச் சென்றார். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவரிடம், ”அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்” என்ற சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், ”கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கவும் நீக்கவோ முடியும். இது எம்ஜிஆர் வகுத்துத் தந்த திட்டம். அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை. தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். விரைவில் இன்று வந்திருக்க தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படும்.
பாஜக வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள்” என்றவரிடம், ‘பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது போல் உள்ளதே?’ என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ”இது காலச் சூழ்நிலை” என்றார். சசிகலா ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.