சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்று உரிமையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என்று கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவருக்கு நெருங்கிய தோழியான சசிகலா, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சசிகலா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்றும், இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வி.கே.சசிகலா அவர்கள் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று கூறினார்.
மேலும், அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கருதுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் தம்மை சந்தித்து வருவதாகவும் கூறினார். தொண்டர்களை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் கூறினார்.
அதிமுக பாஜகவுடன் இணைந்து செயல்படுவது போல் உள்ளதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இது கால சூழ்நிலை என பதிலளித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது; கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ நீக்கவோ முடியும், இது எம்ஜிஆர் வகுத்து தந்த திட்டம். அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை; தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். விரைவில் மேல்முறையீடு செய்வேன். பாஜக வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக்கட்சி தொடங்கினால் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்; ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை. எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும்” என்று சசிகலா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”