சென்னை: பிரசித்தி பெற்ற 8 கோயில்களில் விபூதி, குங்குமம் தயாரித்து, பிறகோயில்களுக்கு வழங்கும் திட்டத்தை காணொலியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரமான விபூதி,குங்குமப் பிரசாதம் வழங்குவதற்காக, பிரசித்தி பெற்ற 8 கோயில்களில் அவற்றை தயாரித்து, பிற கோயில்களுக்கு வழங்கும் வகையில் ரூ.3 கோடியில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தரமான விபூதியும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பண்ணாரி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆகிய 4 கோயில்களில் தரமான குங்குமமும் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பிற கோயில்களுக்கு வழங்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து கோயில்களுக்கும் விபூதி, குங்குமத்தை பிரித்து அனுப்பும் பணியை மேற்கொள்ளுமாறு மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமான விபூதி, குங்குமம் ஒரே சீராக வழங்கப்படும்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மூலவர் சன்னதி,பரிவார சன்னதிகள், ராஜகோபுரம், அர்த்த மண்டபம், குளம், முடிகாணிக்கை, அன்னதான மண்டபங்கள், தங்கும் விடுதி போன்ற திருப்பணிகள் ரூ.10 கோடியில் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 25-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, விரைவில் ஆய்வுக் கூட்டம்நடத்தி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அறநிலையத் துறை செயலர்சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.