இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசு வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஷா மக்மூத் குரேஷியும் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக இன்று பிற்பகல் வேளையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, அவைக்கு வந்த இம்ரான் கட்சி எம்பிக்கள் ஷெபாஷ் ஷெரிப்பிற்கு எதிராகவும், புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கு எதிராகவும் முழக்கத்தை எழுப்பியதை தொடர்ந்து அவர்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வானார்.
இதனையடுத்து, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் பாகிஸ்தான் நாட்டின் 23ஆவது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக, ஷெபாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் திருடர்களுடன் அமர முடியாது என கருத்து தெரிவித்தார். மேலும், எம்.பி பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய தெரிப் இ இன்சாப் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ள நிலையில், இன்று நாடாளமன்றத்தில் பேசியபோது, இறைவன் 22 கோடி பாகிஸ்தான் மக்களை இன்று காப்பாற்றி உள்ளார். பாகிஸ்தான் மக்கள் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடுவர் என்று கூறினார்.
மேலும், தனது அரசு இந்தியாவுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறது, ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் அது நிகழாது. அதனால், அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம். இந்தியா- பாகிஸ்தான் என இருநாடுகளிலுமே வறுமை உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு நான் அறிவுறுத்துவேன். ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன்வருமாறு பிரதமருக்கு நான் அழைப்பு விடுப்பேன். அதன்பிறகு ஒருங்கிணைந்து வறுமைக்கு எதிராக போராடலாம்” என்றார்.