அன்று முள்ளிவாய்க்கால்.. இன்று காலிமுகம்.. பற்றி எரியும் இலங்கை.. சிக்கலில் ராஜபக்சே!

அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்களை முடக்கியது மகிந்தா ராஜபக்சேவின் ராணுவம். சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் கூட லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தீரத்துடன் போரிட்டனர். இன்று அதே ராஜபக்சேவுக்கு எதிராக சிங்கள மக்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தில் தீரத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

2009 ஈழ இறுதிப் போரின்போது காணப்பட்ட அதே கொதிப்பும், கொந்தளிப்பும், விரக்தியும் இப்போது கொழும்பில் காணப்படுகிறது. தமிழர்களுக்கு கேடு விளைவித்த சிங்கள இனவெறி அரசு இன்று அதே சிங்களர்களிடமிருந்து தப்ப முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

கொழும்பு
காலி முகத் திடலில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் முகாம் அமைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை கலைக்கத் தெரியாமல், கலைக்க முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறது இலங்கை அரசு. நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காலி முகத் திடலில் குவிந்து விட்டனர்.

வெள்ளையர்களிடமிருந்து 1949ம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு பல்வேறு வளங்களையும் பெருக்கி, நல்ல நிலையில்தான் இருந்து வந்தது இலங்கை. ஆனால் ராஜபக்சே சகோதரர்கள் வசம் நாடு மொத்தமாக வந்த பிறகு பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. நாடே நிர்க்கதியாகி நிற்கிறது. பொருளாதாரத்தை சீர்குலைத்த ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பாகிஸ்தானிலும் ஒரு “நரேந்திர மோடி”.. முதல்வர் டூ பிரதமர்.. ஷபாஸ் ஷெரீப்!

இதுவரை தமிழர்கள் போராடியதை அவர்கள் வேடிக்கை பார்த்தனர். முஸ்லீம்கள் போராடியபோதும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். இப்போது அவர்களே நடு ரோட்டுக்கு வந்து விட்டனர். தங்களது உரிமைக்காகவும், வாழ்க்கைக்காகவும் வீதிகளில் இறங்கி போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை முதலே காலி முகத் திடலை நோக்கி போராட்டக்காரர்கள் திரளத் தொடங்கி விட்டனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் போராடிக் கொண்டிருந்த மக்கள் காலிமுகத் திடலில் குவிய ஆரம்பித்தனர். இங்குதான் ஜனாதிதி கோத்தபயா ராஜபக்சேவின் செயலகம் உள்ளது. நேற்று இந்தப் பகுதியே ஸ்தம்பித்துப் போய் விட்டது. தற்காலிக முகாம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டக்காரர்கள்.

‘Go home Gota’ என்ற முழக்கத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கூறுகையில், எங்களுக்கு மின்சாரம் இல்லை, காஸ் இல்ல, உணவு இல்லை, மருந்து இல்லை.. கோத்தபயா ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும் என்று ஆவேசமாக கூறினர். நேற்று இப்பகுதியில் மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்கார்ரகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.