டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இரு தரப்பு உறவு, ரஷ்யா – உக்ரைன் விவகாரம், இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு பற்றி ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி; இந்தியா – அமெரிக்க இடையேயான இருதரப்பு மேலும் வலுப்பெற வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகளாக திகழ்கிறது. இந்திய – அமெரிக்க நல்லுறவு சர்வதேச அளவில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும். தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது. ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு வலியுறுத்தினேன். உக்ரைனில் சிக்கிய மாணவர்களை கடும் சவால்களுக்கு இடையே மீட்டோம். விரைவில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும். உக்ரைன் நாட்டில் புச்சா நகரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். புச்சா தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளவும் இந்தியா வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய அதிபர் ஜோ பைடன்; இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைய வேண்டும். உக்ரைன் நாட்டிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியாவுக்கு பாராட்டுக்கள் இவ்வாறு கூறினார்.