இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டுமென, பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
விலைவாசி உயர்வால் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்கு உறையாற்றினார். அப்போது பேசிய அவர், “1948-ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து சமிபத்தில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்றினால் நாடு மிகக் கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது. நாட்டின் பொருளாதாரம் வீழ்வது கண்டும், வேறு வழியில்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கையிருப்பு குறைந்து விட்டதன் விளைவால்தான், மின்வெட்டு, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை எவ்வாறு மீட்பது என்பதற்காக ஜனாதிபதியும், நானும் ஒவ்வொரு கணத்தையும் செலவழித்து வருகிறோம்.
மேலும் போராட்டங்களைத் தடுக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக, அரசாங்கம் கடந்த வாரம் பாரம்பர்ய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் இணைந்து கூடுதல் பொது விடுமுறைகளை அறிவித்தது. அரசுக்கு எதிரானப் போராட்டத்தை நிறுத்துங்கள். தெருக்களில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாடு ஒவ்வொரு டாலர் வருவாயை இழக்கிறது” எனப் பேசினார்.