அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கெடு- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

புதுடெல்லி:
தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்திருந்தது.
டிஆர்எஸ் அரசு, நெல்கொள்முதல் விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்வதாக தெலுங்கானா மாநில பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்,  கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை மந்திரிக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக கூறினார். அதன் பிறகு நாங்கள் முடிவு எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்காக தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
தெலுங்கானா அரசு விவசாயிகளின் உரிமையைக் கோருகிறது என்றும், அரசை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல என்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.