தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யக்கோரி அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மத்திய அரசை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
நடப்பு பருவத்தில் தங்கள் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, டெல்லியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் நடத்திய முதல் ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.சி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், என ஏராளமானோர் தெலங்கானா பவனில் தர்ணாவில் அமர்வார்கள் என்று முன்னதாக டி.ஆர்.எஸ் எம்.பி. ஜி.ரஞ்சித் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் தர்ணா போராட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் அரிசி கொள்முதல் குறித்த முழு சர்ச்சையையும் விளக்கிய பின்னர், “விவசாயிகளை பல்வகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதன் விளைவாக, மாநிலத்தில் புழுங்கல் அரிசி விளைவிக்கும் நிலப்பரப்பு 55 லட்சம் ஏக்கரிலிருந்து 30 லட்சம் ஏக்கராகக் குறைக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் நம்மை தூண்டாமல் இருந்திருந்தால் பரப்பளவு இன்னும் குறைந்திருக்கலாம்.
அப்படியிருந்தும், தெலங்கானா விவசாயிகளிடம் இருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வாங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. நான் பிரதமர் மற்றும் மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயலுக்கு சொல்கிறேன்… தயவுசெய்து எங்களின் உணவு தானியங்களை வாங்குங்கள். நான் உங்களுக்கு 24 மணிநேரம் காலஅவகாசம் தருகிறேன். அப்படி இல்லாவிட்டால் அதன் பிறகு, நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.