ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் இன்று மாலை 4 மணிக்கு யூ-ட்யூப்பில் வீடியோவாக வெளியாகிறது.
ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில், 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, இந்தப் படத்தில் வரும் ‘நாட்டு, நாட்டு’ பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், ஆமிர்கான் முதல் பலரும் இந்த நடனத்திற்கு ஆடியவாறு தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பாடல் 5 மொழிகளில் இன்று லஹரி மியூசிக் யூ-ட்யூப் சானலில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் ‘நாச்சோ, நாச்சோ’ என்றும், தமிழில் ‘நாட்டுக்கூத்து’ என்றும் இந்தப் பாடல் வெளியாகிறது.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.