“இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை!” – உத்தவ் தாக்கரே காட்டம்

மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இப்போது இப்போது விரோதிகளாக இருக்கின்றன. சிவசேனா தலைவர்கள் மீது அமலாக்கப்பிரிவு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் பாஜக தொடர்ந்து இந்துத்துவாவுக்கு உரிமை கோரி வருவது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்று இருக்கவில்லை. கடவுள் ராமர் பிறந்திருக்காமல் இருந்திருந்தால் அரசியலுக்கு பாஜக என்ன பிரச்னையை எழுப்பி இருக்கும். இப்போது பிரச்னை எதுவும் இல்லாததால் மதம் மற்றும் வெறுப்பை பரப்புவது குறித்து பாஜக பேசுகிறது.

உத்தவ் தாக்கரே

பொய்யை பரப்புவதில் நாங்கள் பின் தங்கித்தான் இருக்கிறோம். காவியும், இந்துத்துவாவும் இணைந்துதான் மத்தியில் ஆட்சியை பிடிக்க உதவும் என்று மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார். எனது தந்தைதான் காவியும், இந்துத்துவாவும்தான் டெல்லியில் ஆட்சியமைக்க உதவும் என்று அவர்களுக்கு(பாஜக) வழிகாட்டினார். சிவசேனா எப்போதும் காவி மற்றும் இந்துத்துவாவின் மீது உறுதியாக இருக்கிறது. ஆனால் பாஜக மாறுபட்ட கொள்கைக்காக பாரதிய ஜன ஜங்க், ஜன ஜங்க் என்ற மாறுபட்ட பெயர்களை வைத்திருக்கிறது.

பால்தாக்கரே மீது மரியாதை வைத்திருக்கிறது என்று பாஜக கூறுகிறது. அப்படி என்றால் நவிமும்பை விமான நிலையத்திற்கு பால் தாக்கரே பெயரை வைக்க ஏன் பாஜக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பாலாசாஹேப் அறையில் அமித் ஷா சொன்ன வார்த்தைகளை ஏன் பாஜக நிறைவேற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இருகட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்ததாக சிவசேனா கூறுகிறது. ஆனால் பாஜக அப்படி தாங்கள் கூறவே இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் பிரிந்துவிட்டன. கோலாப்பூர் வடக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் நீண்ட நாள்களாக சிவசேனாதான் வெற்றி பெற்று வந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.இறந்துபோனார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே மும்பையில் இருந்து டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்தார்.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

இதில் பேசிய உத்தவ்தாக்கரே, “2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் பாஜக உறவை முறித்துக்கொண்டது. ஆனால் அத்தேர்தலில் சிவசேனா வேட்பாளர் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 47 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனாலும் சிவசேனா வேட்பாளருக்கு வெறும் 75 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது. அதாவது முந்தைய தேர்தலை விட வெறும் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அதிகமாக கிடைத்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் 91 ஆயிரம் வாக்கு பெற்று இருக்கிறார். அப்படியானால் பாஜக முந்தைய தேர்தலில் பெற்ற 40 ஆயிரம் வாக்குகள் எங்கு சென்றது. இந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றதா என்பதை யார் தெளிவுபடுத்துவார்கள். காங்கிரஸ் கட்சியுடன் பாஜக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டதா? . இதில் சிவசேனா வேட்பாளர் தோல்வி அடைவதற்கு பாஜகதான் காரணம். சிவசேனா வெளிப்படையான அரசியல் செய்யும். ஆனால் முதுகில் குத்தமாட்டோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.