காஷ்மீர் விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படாமல் இந்தியாவுடன் சுமூக உறவை பேணுவது என்பது சாத்தியமற்றது என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பாகிஸ்தானின் 23-வது பிரதமராக ஷெபாஸ் ஷரீப் இன்று பதவியேற்றார். பின்னர் இஸ்லாமாபாத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் மெத்தனமானப் போக்கை கடைப்பிடித்து வந்தார். குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்தியா கடந்த 2019-இல் நீக்கிய போதும் இம்ரான் கான் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், காஷ்மீர் பிரச்னையில் எனது அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கும். காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், இந்தியாவுடன் நீடித்த சமூகமான உறவை பாகிஸ்தானால் நிச்சயம் பேண முடியாது. இதனை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொண்டு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
அப்போது தான், இரு நாடுகளிலும் நிலவி வரும் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். இவ்வாறு ஷெபாஸ் ஷரீப் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM