"இனி நான் ஃபுல் டைம் காமெடியன்!"- புது ரூட்டில் ரவிமரியா

நகைச்சுவையில் மட்டுமல்ல, தனித்துவமான வாய்ஸ் மாடுலேஷனிலும் அசத்துபவர் இயக்குநர் ரவிமரியா. சமீபத்தில் வெளியான ‘இடியட்’ படத்தின் மூலம் முழு காமெடி நடிகராக களம் இறங்கிவிட்டார். சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’, ஆதியின் ‘பார்ட்னர்’, நட்டியின் ‘குருமூர்த்தி’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, காஜல் அகர்வாலின் ‘காட்டேரி’ என இவர் நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீள்கிறது.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘இடியட்’ பார்த்துட்டு சக இயக்குநர்கள், நடிகர்கள் பாராட்டினாங்க. அதிலும், இயக்குநர் சரண் சாருக்கு படம் அவ்ளோ பிடிச்சிருந்தது. பக்கம் பக்கமா பாராட்டி கடிதம் எழுதினார். ‘ரவிமரியா திரையில் வரும்போது, ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள்’னு அதுல குறிப்பிட்டிருந்தார். ராம்பாலா சார் என்னைக் கூப்பிட்டு ‘இடியட்’டில் டிடிஎஸ் கேரக்டர் கொடுக்கும் போது, சின்ன பயம் வந்துச்சு. முழு காமெடி நடிகரா என்னால பண்ணமுடியுமானு யோசிச்ச பிறகே, கமிட் ஆனேன். ஆனா, நல்ல வரவேற்பு கிடைச்சது, எனக்கு உற்சாகமா இருக்கு…” – சந்தோஷ துள்ளல் துள்ளுகிறார் ரவிமரியா.

‘தேசிங்கு ராஜா’, ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’னு எழில் படங்களில் மட்டும் உங்க காமெடி தூக்கலா இருக்கே..?

ரவிமரியா

“ஒரு குடும்பத்துல பத்து பிள்ளைங்க இருந்தாலும், ஒவ்வொரு புள்ளைக்கும் ஒரு திறமை இருக்கும். கடைசி புள்ளைதான் பாவம். அவனைத்தான் அக்கறையா பாத்துக்கணும்னு நினைப்பாங்க. அந்த மாதிரி ஒரு அன்பு எழில் சார்கிட்ட கிடைச்சிருக்குனுதான் சொல்லணும். இயக்குநர் சங்கத்தில் நான் அடிக்கும் காமெடிகளை எல்லாம் எழில் சார் ரசிப்பார். அப்படி ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘நீங்க ஒரு காமெடியான ஆள்… நீங்க எப்படிங்க வில்லனா பண்ணிட்டிருக்கீங்க?’னு கேட்டார். நீங்கதான் சார் என்னை கண்டுபிடிச்சிருக்கீங்கனு சொன்னேன். ‘ஜெகலால கில்லாடி’யை சேர்த்தா அவரோட இயக்கத்தில ஆறு படம் பண்ணிட்டேன்.”

‘ஆசை ஆசையாய்’, ‘மிளகாய்’னு ரெண்டு படங்கள் இயக்குனீங்க… மறுபடியும் எப்போ படம் இயக்கப் போறீங்க?

இயக்குநர் ரவிமரியா

“முதல் காதல் எப்படி மறக்க முடியாதோ, அப்படி முதல் படமும் மறக்க முடியாது. இயக்குநர் ஆகணும்னுதான் சென்னை வந்தேன். இயக்குநர் ஆனேன். எனக்குள் இருக்கும் எழுத்தின் வேகம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆனா, நடிகனா ஆன பிறகு எந்தப் படத்தின் இயக்குநர்கிட்டேயும் அவங்க வேலையில தலையிட்டதில்ல. அவங்களாகவே உங்களுக்கு வேறெதும் ஐடியா இருக்குதானு கேட்டால், என் கருத்தைச் சொல்வேன். ஒரு இயக்குநருக்கு நடிகர்களால பிரஷர் உண்டாகும். அப்படி ஒரு பிரஷரை என் இயக்குநர்களுக்கு நான் கொடுக்காம பாத்துக்கறேன். ஏன்னா, இயக்குநர்கள் எவ்ளோ பெரிய சுமையை சுமக்குறாங்கனு எனக்குத் தெரியும். அதனால தொந்தரவு இல்லாத ஒரு நடிகனா இருக்கணும்னு விரும்புறேன். அதே சமயம், எனக்குள் இருக்கும் இயக்குநரையும் தூங்கவிடாம வச்சிருக்கேன். ‘இப்படி ஒரு படம் எடுத்து அசத்திட்டான்யா…’னு பாராட்டு வாங்குற மாதிரி ஒரு படம் பண்ணுவேன். அதுக்காக திரைப்பட விழாக்கள் எங்கே நடந்தாலும் என்ன ட்ரெண்ட் போயிட்டிருக்குனு படங்கள் பார்த்து தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். ‘இடியட்’ல முழு நீள காமெடியா பயணப்பட்டது போல, தொடர்ந்து காமெடியனா கவனம் செலுத்த விரும்புறேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.