கொழும்பு,
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.
ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மக்கள் தினமும் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது.
கொழும்புவில் இன்று காலை முதல் அதிகமான மழை பெய்து வந்ததன் காரணமாக, போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தது. பிற்பகலுக்கு பிறகு மழை விட்டதன் காரணமாக, மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக, அதிபர் மாளிகைக்கு அருகே இருக்கக் கூடிய இடத்தில், இளைஞர்கள் அதிக அளவில் கூடிவருகிறார்கள். ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்துள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் கூடிய வண்ணம் இருக்கின்றனர். போராட்டமானது மும்முரமாக நடந்து வருகிறது.
இதன் காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் போக்குவரத்து இந்த சாலையில் துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று இரவு 8 மணியளவில் அதிபர் மாளிகையில் அவசரக்கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு சந்தித்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பாக இடைக்கால அரசு, புதிய அமைச்சர்கள் நியமனம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது குறித்தும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் அதிபர் ஆலோசனைகள் கேட்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அழைக்கப்பட்டால் அவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.