பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளை மூட சொல்லியும், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய சொல்லியும், ஹலால் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளின் பிரசாரங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலை கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிலவி வருகிறது. இதனிடையே, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “கர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் பசவராஜ் பொம்மை அனைத்து மக்களும் சமம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்கும்போது, இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முன்னேற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துவேன்.
அனைத்து சமூகமும் அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தாய்க்கு பிறந்த சகோதரர்கள். அவர்களுக்குள் ஒரு பந்தம் இருக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில குண்டர்கள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்து – முஸ்லிம் பிணைப்பை உடைக்க முயற்சிகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கவும், மக்கள் நிம்மதியாக வாழவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.
கர்நாடகாவில் தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இந்த பேச்சு கவனம் ஈர்த்து வருகிறது.