வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படையினர், நாட்டின் கிழக்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரஷ்ய படையினர் விலகிச் சென்றனர். அந்த பகுதிகளில் ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மக்களை சித்ரவதைக்கு ஆளாக்கி கொன்றிருப்பதாக, ரஷ்ய படையினர் மீது உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. கீவில் இருந்து விலகிய ரஷ்ய படையினர், நாட்டின் கிழக்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவில் நேற்று, ரஷ்ய படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். கார்கிவுக்கு அருகே, சுஹூவ் நகரில் உள்ள விமானப்படை தளம், முகோலேவ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் ராணுவத்தின், ‘எஸ் – 300’ ரக ஏவுகணை தகர்ப்பு அமைப்புகள் ஆகியவை ஏவுகணைகளை வீசி தகர்க்கப்பட்டன.
இதேபோல் கடல் பகுதியில் இருந்து ஏவுகணையை வீசி, நிப்ரோ பிராந்தியத்தில் இருந்த உக்ரைன் ராணுவ தலைமையகம் மற்றும் விமான நிலையத்தை ரஷ்ய படையினர் தகர்த்துள்ளனர். இதை, ரஷ்ய ராணுவ அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.இதற்கிடையே நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவிற்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்றார். அங்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசிய அவர், சாலைகளில் நடந்து சென்று, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைனின் எதிர்க்காலம் ஆபத்தில் உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுடன் முடிவடையாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும். அதுவே, ரஷ்யாவின் இலக்காகவும் இருக்கும். அமைதியை நிலைநாட்ட, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement