ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற 67 வயது மூதாட்டி மனு அளித்தார்.
அதில், `ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் மகாலிங்கம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். எங்கள் இரு மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். என் கணவர் மகாலிங்கம் இறந்துவிட்ட நிலையில், அவருடைய பென்ஷன் தொகையை வைத்து தனியாக வாழ்ந்து வருகிறேன்.
இந்நிலையில் என் மகன் ரேஷன் கார்டில் என்னுடைய பெயரை நீக்கிவிட்டு, என் பெயரில் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என கடலாடி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு கொடுத்தேன். ஆனால், நான் இறந்து விட்டதாகக் கூறி என்னுடைய பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் என்னுடைய ஆதார் கார்டும் முடக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து தெரிந்த கடலாடி வட்ட வழங்கல் அதிகாரிகளும் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஓராண்டாக புதிய ரேஷன் கார்டு வந்துவிடும் என என்னை அழைக்கழித்து வந்தனர்.
பின்னர் என்னுடைய மகனிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் ராமநாதபுரம் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் அளித்தார். அப்போது நான் இறந்து விட்டதாக தவறுதலாக பெயர் நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இந்த தவறை சரிசெய்து மீண்டும் ஆதார் கார்டில் பெயர் சேர்த்து புதிய ரேஷன் கார்டு வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை ஆதார் கார்டில் பெயர் சேர்க்கப்படாததால் நான்கு ஆண்டுகளாக உயிரோடு இருந்தும் இறந்ததாக வாழ்ந்து வருகிறேன்.
மேலும், ஆதார் கார்டில் பெயர் நீக்கப்பட்டதால் நான் இறந்துவிட்டதாகக் கருதி என் கணவரின் பென்ஷன் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே என்னுடைய பெயரை ஆதார் கார்டில் சேர்த்து புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாரியம்மாளிடம் பேசினோம். “உயிரோடு இருக்கும் என்ன இறந்துவிட்டதாகக் கூறி ரேஷன் கார்டிலிருந்து எனது பெயரை நீக்கிவிட்டனர். இறந்த என் கணவரின் பென்ஷனை வைத்துதான் நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆனால் ஆதார் கார்டு முடக்கப்பட்டதால் நான் இறந்து விட்டதாக அந்த பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால் நான்கு ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட வட்டவழங்கல் அலுவலகத்திற்கும் மனு கொடுத்து நடையாய் நடக்கிறேன். எனக்கு புதிய ரேஷன் கார்டு வழங்காவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய மகன் ரேஷன் கார்டிலாவது எனது பெயரை சேர்த்து நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதையாவது உறுதிப்படுத்துங்கள் என அதிகாரிகளிடம் மன்றாடி வருகிறேன். தவறு செய்தது அவர்கள்… ஆனால் நான் தவறு செய்ததுபோல் என்னை அதிகாரிகள் அலைக்கழிப்பது மனவேதனையாக இருக்கிறது. இதுபோன்ற தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என ஆதங்கத்துடன் கூறினார்.