ஆமதாபாத்-”நம்மை விட்டு கொரோனா வைரஸ் இன்னும் விலகவில்லை; அது உருமாற்றம் அடைந்து பரவுகிறது. அதனால் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது,” என, பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமை யிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள ‘மாதா உமையாள் தேவி’ கோவிலின் ஆண்டு விழாவில், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:நாட்டை விட்டு கொரோனா இன்னும் விலகவில்லை. இந்த தொற்று நோய் உருமாற்றம் அடைந்து பரவும் தன்மை உடையது. கொரோனா பாதிப்பிலிருந்து தற்போது நாம் மீண்டுள்ளது உண்மை.
ஆனால் மீண்டும் எப்போது பரவும் என யாராலும் கூற முடியாது. அதனால் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நாம் கைவிட்டு விடக் கூடாது.இயற்கை விவசாயம்மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், ௧௮௫ கோடி’டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம் சாதனையை பார்த்து உலகமே வியக்கிறது. ரசாயன உரங்களால் நம் பூமி தாய் பாதிக்கப்படுவதை தடுக்க இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும். குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்யா தேவவிரத், இயற்கை விவசாய மேம்பாட்டுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து உள்ளார்.
தாலுகா அளவில், அவர் இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் பல லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர். நாம், ௭௫வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகிறோம். இதையொட்டி நாடு முழுதும், மாவட்டந்தோறும் ௭௫ குளங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் மக்கள் அனைவரும் பங்கேற்று நீர்வளங்களை அதிகரிக்க வேண்டும்.தண்ணீர் பாதுகாப்பு பணிகள், ஆன்மிக, தேச சேவைக்கு சமமானது என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை துவங்குவதற்கு முன், நம் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் துார் வாருதல், ஆழப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புஊட்டச்சத்து குறைபாடால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால், நாடும், சமூகமும் வலுவாக இருக்கும்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் நல்ல பலனை அளித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததாவது:விவசாயிகளால் நாடு பெருமை அடைகிறது. அவர்கள் நலமாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். ‘பிரதமர் கிசான் நிதி’ மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களால் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூன்று மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு நம் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், டில்லி, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், கடந்த ஒரு வாரத்தில், அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் நேற்று முன்தினம் 160 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 18 லட்சத்து 66 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது. ஹரியானாவில் முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் கூடுதலாக, 68 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தில் ஒமைக்ரான் வகை வைரசின் ஒரு பிரிவான, எக்ஸ்.இ., வகை வைரசால், கடந்த வாரம் ஒருவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.கடந்த 7ம் தேதி, அங்கு நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 34 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். முந்தைய வாரத்தை விட, கடந்த வாரம் கூடுதலாக 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது.
இந்த மாநிலங்களில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தனியார் மையங்களில்’பூஸ்டர் டோஸ்’ துவக்கம்நாடு முழுதும் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்த தனியார் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே இரு டோஸ் செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதே தடுப்பூசியை பூஸ்டர் டோசாக தனியார் மையங்களில் செலுத்திக்கொள்ளலாம். இதற்கு, தடுப்பூசி விலையுடன் சேவை கட்டணமாக 150 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். இந்த பணி நாடு முழுதும் நேற்று துவங்கியது.