loss of Ennore wetlands to fly ash : வடசென்னையில் அமைந்திருக்கும் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையிலான குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன், மீனவர் நல சங்க உறுப்பினர் கே.ஆர்.செல்வராஜ் குமார் ஆகியோர் எண்ணூர் கழிமுகத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 2016ல் பசுமைத் தீர்ப்பாயத்தை நாடினார்கள்.
சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது. ஆனால் அந்த குழு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் அதன் பின்னர் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவரான சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ்-ஐ நியமித்தது.
அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் இந்துமதி நம்பி, மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த குழு ஏப்ரல் 4-ம் தேதி அன்று சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் நடத்தி வரும் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1, 2015ம் ஆண்டில் முதல் நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இசைவாணையை பெறாமலும், ஏப்ரல் 2020ல் இருந்து அபாயகரமான கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியை பெறாமலும் செயல்பட்டு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிகழ்நேர அமைப்பின் தரவுகளை வழங்காமல் தவறான தரவுகளை வழங்கியுள்ளது அனல் மின் நிலையம் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தவறான தரவுகளை அழித்தும் கூட வடசென்னை அனல்மின் நிலைய அலகு ஒன்றில் நுண்துகள் மாசின் (Particulate Matter) வெளியேற்றம் 481 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளது.
சாம்பல் குட்டைகளை முறையான பாதுகாப்புடன் அமைக்காததால் நிலத்தடி நீர் நச்சாகியுள்ளது. மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அண்மைக் கணக்கின்படி 65.96 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி சாம்பல் கணக்கில் வராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பகுதி ஆற்றிலும், கழிமுகத்திலும் அதைச்சுற்றியும் கொட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கொட்டப்பட்ட சாம்பலின் உயரம் 1 அடி முதல் 8 அடியாக இருக்கிறது என்றும் மொத்தமாக 3.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி சாம்பல் கொட்டப்பட்டுள்ளது. இதில் 1.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நீர் நிலையாக செயல்பட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உப்பங்கழிமுகமும் நீர் நிலைகளும் ஈர நிலங்களும் எங்கே?
வட சென்னையில் 9.20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 40.கி,மீ சுற்றளவில் அமைந்துள்ளது எண்ணூர் உப்பங்கழிமுகம். தன்னுடைய மொத்த பரப்பளவில் 43% பக்கிங்காம் கால்வாயையும் 19% கொசஸ்தலை ஆற்றையும், 19% அரசு நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. மேற்கூறிய அலட்சியமான நடவடிக்கைகளின் காரணமாக, இந்தக் கழிமுகம் கடுமையாக மாசடைந்து அதன் மீன்வளம் முற்றிலுமாக அழிந்ததுள்ளது.
466 பக்கங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, வடசென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் அனல் மின் நிலையங்களால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து பல்வேறு கவலைகளையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் 1996 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையே இந்த நிலத்தின் தன்மை முற்றிலுமாக மாறியுள்ளது என்று கூறிப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட 905 ஹெக்டர் பரப்பில் 68% ஈரநிலங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு உப்பங்கழிகளின் பரப்பு 555.37 ஹெக்டராகவும், நீர் நிலைகளின் பரப்பு 233.60 ஹெக்டரிலும் பரவி இருந்தது. ஆனால் தற்போது அவை ஏதும் பார்வைக்கு தட்டுப்படாத வகையில் சாம்பலால் மூடப்பட்டு காட்சி அளிக்கிறது. இருப்பினும் கூட உப்பங்கழிகளின் பரப்பு 95.55 ஹெக்ட்ராகவும், நீர் நிலைகள் 148.69 ஹெக்டராகவும், அலையாத்தி காடுகளின் பரப்பு 68.72 ஹெக்டரில் இருந்து 33.74 ஹெக்டராக குறைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை முறையாகக் கையாளாமல் விதி முறைகளை மீறிய குற்றத்திற்காக ரூ. 61.9 கோடியையும் காற்று மாசுபாடு விதிகளை மீறியதற்காக ரூ. 6.6 கோடியையும் அபராதமாக மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ளது.
இந்த பாதுகாப்புகளை முறையாக மேற்கொள்ள அரசு சாரா நிறுவனம் ஒன்றை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் வடசென்னை அனல்மின் நிலையத்தைக் கண்காணிக்க மட்டும் ஒரு மாசுக் கட்டுப்பாடு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடசென்னை மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் அனைத்தும் இது போன்று முறையான விதிமுறைகளை பின்பற்றி செயல்படாத மேம்பாட்டு திட்டங்களால் பாழடைந்துள்ளது. ஏற்கனவே சூழல் இப்படி இருக்கின்ற நிலையில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.