சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜாமீனில் வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று 3-வது முறையாகக் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கை உள்ளது. மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இங்கு இந்திக்கு இடமில்லை. தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் மக்கள் விரும்பும் எதையும் நிறைவேற்றாமல் ஆட்சி நடக்கிறது. ஆனால், திராவிட மாடல் என மக்களைத் திசை திருப்பி முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அவருக்குச் சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.