கொல்கத்தா: கொல்கத்தாவில் ராமநவமி விழாவில் பங்கேற்க சென்ற ஒன்றிய பாஜக அமைச்ர் சுபாஷ் சர்க்காரின் கார் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராம நவமியை முன்னிட்டு குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளன. கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. மேற்கு வங்கத்தில் ஒன்றிய அரசின் பாஜக அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பங்குராவிற்கு சென்ற போது அவரது கார் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர்தப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்ய வேண்டும்’ என்றார். இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வெளியிட்ட பதிவில், ‘ஹவுரா மாவட்டத்தின் ஷிவ்பூர் பகுதியில் ராம பக்தர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. போலீசார் நடத்திய தடியடியில் மக்கள் சிலர் காயமடைந்தனர். மேற்குவங்கத்தில் மக்களின் வழிபாட்டு முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதா?’ என்று கேட்டுள்ளார்.