நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.