அகமதாபாத்: ‘‘கரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மீண்டும் மீண்டும் உருமாறி பரவி வருகிறது. எனவே, தொற்றுக்கு எதிரான போரை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கதிலாவில் உமியா மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை குஜராத் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திறந்து வைத்தார். தற்போது ராம நவமியை முன்னிட்டு உமியா மாதா கோயிலின் 14-வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அயோத்தி மற்றும் நாடு முழுவதும் ராம நவமி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஆன்மிக மற்றும் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடமாக இருப்பதுடன், கதிலாவில் உள்ள உமியா மாதா ஆலயம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது.
நான் குஜராத் முதல்வராக இருந்த போது மழைநீர் சேமிப்பை, மக்கள் இயக்கமாக மாற்றினேன். தற்போது மத்திய அரசு சார்பில் நீர்ப்பாசன திட்டங்கள், மழை நீர்சேகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பாகவும் ஏரி, குளங்களை ஆழப்படுத்த வேண்டும். கால்வாய்களைத் தூர்வார வேண்டும். ரசாயனங்களில் இருந்து அன்னை பூமியை பாதுகாக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
குஜராத்தில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் நல்லபலனை அளித்துள்ளது. குஜராத்தில் இருந்து ஏராளமான பெண்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோயில் அறக்கட்டளை மூலம் கிராமங்களில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கான போட்டியை நடத்த வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மண்டபங்களில் யோகா முகாம்கள்,ஏழை மாணவருக்கான பயிற்சிவகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 தடுப்பணைகளை கட்டலாம். ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகளில் தேசியக் கொடி ஏற்றலாம். மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து மக்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். ஒன்றிணைந்த மக்கள் சக்தியால் மாநிலத்தையும் நாட்டையும் வளர்ச்சி அடைய செய்ய முடியும்.
கரோனா வைரஸ் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்தப் பிரச்சினை முழுமையாக நீங்கிவிட்டது என்று சொல்வதற்கில்லை. அந்த வைரஸ் முழுமையாக நீங்கவில்லை. தற்போது சற்று இடைவெளி கொடுத்துள்ளது. அது உருமாறி மீண்டும் மீண்டும் பரவுகிறது. எனவே, நாட்டு மக்கள் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரை கைவிட்டுவிடக் கூடாது. உருமாறிய கரோனா வைரஸ் எப்போது பரவும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இதுவரை 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நாம் சாத்தியப்படுத்தி இருக்க முடியாது. இந்த அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டதை பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அதிகரிக்கும் கரோனா: கடந்த சில நாட்களாக டெல்லி,ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒமைக்ரானின் எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிவேகமாக பரவும் வைரஸ் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.