குஜராத், மத்திய பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை- இரண்டுபேர் பலி

அகமதாபாத்:
ராமர் பிறந்தநாளான ராம நவமி வட மாநிலங்களில் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 
அப்போது  குஜராத், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. 
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் கம்பாத் பகுதியில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் உருவானது. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினார்கள். 
சம்பவம் நடந்த பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இந்த வன்முறையில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்
படுகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில்  ஹவுரா, ஷிப்பூர், கர்கோனிக் பகுதியில் நடைபெற்ற  ஊர்வலத்தில் சிலர் கற்களை வீசியதால் வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், 4 வீடுகள் தீ வைத்து கொளுத்தப் பட்டது. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயம் அடைந்தனர். 
வன்முறையை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில் ராம நவமி ஊர்வலத்தின் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக மேற்கு வங்காள எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராம நவமி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலம் லோகர் டகாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கல்வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அந்த பகுதியில்  அமைதி திரும்ப கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி கொண்டாட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.