புதுடெல்லி: குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது இரங்கலை தெரிவித்து, பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் தகேஜ் தொழிற்பூங்காவில் மிகப்பெரிய ரசாயன தொழிற்சாலை உள்ளது.இன்று அதிகாலை 3 மணியளவில் தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தீடிரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து ஆமதாபாத் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள்கொண்டுவந்தனர். அந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.