நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் கிராமம் பகுதியில் பாலன் என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியார், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டிருந்தன. பின்னர், அங்கிருந்து சின்னகரும்பாலம், கிளன்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானைகள் கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக உலிக்கல் கிராமப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் முகாமிட்டிருந்தன.
இந்நிலையில், உலிக்கல் பகுதியின் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவந்த இந்த யானைகள் கூட்டம் அங்கு வசிக்கும் பாலன் என்பவரின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, சிறிது நேரம் அங்கிருந்த யானைகள் பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிகளுக்குள் சென்றன. சிசிடிவி காட்சிகளைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM