கோடை வெயிலில் துவண்டிருந்த மக்களையும், மண்ணையும் குளிர்விக்கும் வகையில், தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையால் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நகரப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், வாகனங்களை இயக்குவதில் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 3ஆவது நாளாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்செந்தூரில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இடி, மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி வீசியது. அதில், ஆயிரத்து 500க்கும் அதிகமான வாழை மரங்கள் உடைந்து விழுந்தன. 10 லட்சத்திற்கு மேலாக இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM