கொழிஞ்சாம்பாறை:
மலப்புரம் மாவட்டம் வேங்கரை பகுதியை சேர்ந்தவர் அஷரப் (வயது48). இவர் நேற்று பொண்ணானி பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் தனது பையில் இருந்த பணம் மாயாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தான் வந்த பகுதியில் சென்று தேடி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே பொண்ணானி போலீசார் சாலையில் தவற விட்ட பணத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் தங்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த பணத்திற்கு உரியவர்கள் ஆதாரத்தை காண்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையறிந்த அஷரப் பொண்ணானி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் வினோத்திடம் இந்த பணம் தன்னுடையது என கூறி சரியான ஆதாரங்களை காண்பித்தார்.
இருப்பினும் அஷரப் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சற்று நேரம் இருங்கள் என கூறி விட்டு காவல் நிலைய அறைக்குள் சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் சோதனை செய்தனர். அப்போது அவர் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஹவாலா பணம் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடலில் ரூ.2 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் வேறு ஏங்காவது பணம் வைத்துள்ளரா? எனவும் சோதிப்பதற்காக அவர் வந்த மொபட்டையும் சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சம் பணம் இருந்தது.
இந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இந்த பணங்களுக்கு கணக்கு கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போலீசார் 6 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.