பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப்-2′ மற்றும் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்களால், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ‘ஜெர்ஸி’ படத்தின் வெளியீட்டை ஒருவாரம் திடீரென தள்ளி வைத்துள்ளனர்.
நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஜெர்ஸி’ படத்தை, அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். ஷாகித் கபூர், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அத்துடன் படத்தை ப்ரமோஷன் செய்யும் வேலைகளிலும், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அதே தேதியில் வெளியாகும் ‘கே.ஜி.எஃப்-2’ படத்திற்கு, இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களிலும், ‘கே.ஜி.எஃப்-2’ படத்தை திரையிடவே உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி ஒருநாள் முன்னதாகவே வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்தியில், ஆக்ஷன் காட்சிகளுக்கு வரவேற்பு நிலவுகிறது.
இதனால் ஷாகித் கபூர் நடித்துள்ள, ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒருவாரம் தள்ளி வைத்துள்ளனர். ‘ஜெர்ஸி’ திரைப்படம் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாக உள்ளது. கன்னடத்தில் உருவான ஒரு படத்தின் வெளியிட்டால், பாலிவுட் படத்தின் வெளியீடு தள்ளி சென்றிருப்பதை, ‘கே.ஜி.எஃப்’ பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.