ஷாங்காய்:
சீனாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவி வருவதால் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அந்நாட்டின் மிக பெரிய வர்த்தக நகரமாக திகழும் ஷாங்காய் தற்போது கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
சீனாவில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஷாங்காய் நகரில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
வாகனபோக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாலும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாலும் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஷாங்காயில் தற்போது உணவுபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களைசேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் வழங்கி வந்தாலும் அது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.இதனால் பொதுமக்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் பால்கனி வழியாக போலீசார் மற்றும் ஊழியர்களிடம் உதவி கேட்டு கெஞ்சி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதேநிலை நீடித்தால் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை அங்கு உருவாகும்.
இதையும் படியுங்கள்… மதுரையின் சாயலை கைலாசாவில் உருவாக்கி சித்திரை திருவிழா கொண்டாடும் நித்யானந்தா