பெங்களூரு : மாணவர்களுக்கு முக்கியமான தேர்வுகள் நடக்கும் நேரத்தில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்தமில்லாமல் மின் தடை துவங்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மானாவாரியாக கரன்ட் கட் செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெப்பம், மற்றொரு பக்கம் மின் தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொதுவாக கோடைக்காலத்தில், மின்சாரம் தேவை அதிகமாக இருக்கும். பயன்பாடு அதிகம் இருக்கும் போது அதற்கேற்ற வகையில் சப்ளை இருக்காது. அத்தகைய நேரத்தில், மின் வாரிய இயந்திரங்களின் பாதிப்புகளை தவிர்க்க மின் தடை செய்யப்படுவது வழக்கம்.அத்தகைய நேரங்களில் மின்தடை செய்வது வழக்கம்.
இது தொடர்பாக, மின் வினியோக நிறுவனங்கள், முன் கூட்டியே அறிவிக்கும். ஆனால் இம்முறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், மின்சாரம் தடை செய்யப்படுகிறது. பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல இடங்களில் காலை, மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை என, எந்த நேரத்திலும் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் அன்றாட பணிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தற்போது எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் இரண்டாம் ஆண்டு பி.யூ., தேர்வுகள் நடக்கின்றன.
மேலும் சில முக்கியமான தேர்வுகளும் நடக்கவுள்ளன. இது போன்ற சூழ்நிலையில், மின்சாரம் தடைபடுவது மாணவர்களுக்கும், மக்களுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது.கிராமங்களிலும் மின் தடை செய்யப்படுவதால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது கஷ்டமாக உள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவு தானிய விளைச்சல்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
கர்நாடகாவுக்கு மின்சாரம் வினியோகிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆர்.டி.பி.எஸ்., எனும் ராய்ச்சூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறையால், சில யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.மாநிலத்தின் மற்ற அனல் மின் உற்பத்தி நிலையங்களும், இதற்கு விதிவிலக்கல்ல. நெருக்கடியான நேரத்தில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கை கொடுத்து உதவுவது வழக்கம். ஆனால் மாநிலத்தின் முக்கியமான அணைகளில், நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே நீர்மின் உற்பத்திக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சோலார் மின்சாரத்தை அதிகம் நம்ப வேண்டியுள்ளது. மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின் தடை செயல்படுத்தப்படவில்லை. அனைத்து வழிகளிலும், தேவையான மின்சாரம் உற்பத்தியாகிறது. தற்போதைக்கு பிரச்னை இல்லை. ஆனால் மின் உற்பத்தி யூனிட்கள், திடீரென பழுதடைவதால் மின் தடை பிரச்னை ஏற்படுகிறது. மின் பற்றாக்குறை இல்லை. அவ்வப்போது மின் தொகுப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், மின் வினியோகிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. இதையே மின் தடை என கூறுவது சரியல்ல. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தால் மின் பயன்பாடு, தேவை அதிகரிக்கும். மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், எதிர்வரும் நாட்களில், மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தேர்வுகள் முடிந்த பின், இதைப்பற்றி அரசு முடிவு செய்யும். நீர் மின் உற்பத்தி அணைகளான ஷராவதி, வராஹி, சூபாவில், 37 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது. எதிர்வரும் நாட்களில், குடிநீர் தேவை அதிகரிக்கும்.அப்போது சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்பதால், நீர் மின் உற்பத்தி அளவை குறைத்துள்ளோம். இதற்கு முன் 1,700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இப்போது 300 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மின் தடையை கண்டித்து தர்ணாபங்கார்பேட்டையில் தொடர்ந்து மின் தடை செய்வதால் தேர்வெழுத செல்லும் மாணவர்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். மாணவர்கள் நலனுக்காக மின் தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி பங்கார்பேட்டை ‘பெஸ்காம்’ அலுவலகம் முன், ஆத்ம விசுவாச சங்கம் சார்பில் தர்ணா நடத்தப்பட்டது.