பங்கு சந்தை என்றால் என்ன? அது எப்படி செயல்படுகின்றது என்பதை சீரிஸ் 1ல் பார்த்தோம். இன்று பங்கு சந்தைக்குள் எப்படி ஒரு நிறுவனம் நுழைகிறது. ஐபிஓ என்றால் என்ன? இரண்டாம் நிலை சந்தை அல்லது செகண்டரி சந்தை என்றால் என்ன?
இதிலும் லாபம் பார்க்க முடியுமா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வார சந்தைபோல் தான் பங்கு சந்தையும் என்பதை பார்த்தோம். அந்த வார சந்தையில் யார் வேண்டுமானாலும் கடை போட முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. அதனை போலத் தான் ஒரு நிறுவனம் பங்கு சந்தைக்குள் நுழைய சில அனுமதிகளை பெற வேண்டியிருக்கும். அப்படி அனுமதிகளை பெற்று ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்கு சந்தைக்குள் நுழைவதை தான் ஐபிஓ என்பார்கள்.
சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி வேலை செய்கிறது.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
பொதுப் பங்கு வெளியீடு (IPO)
பொது பங்கு வெளியீடு என்பது ஒரு நிறுவனம் பங்கு சந்தைக்குள் முதன் முறையாக நுழையும் போது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதாகும். தற்போதைய காலகட்டங்களில் வளர்ந்து வரும் நிறுவனங்கள் நிதி திரட்ட தேர்தெடுக்கும் ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பொதுப் பங்கு வெளியீடு என்பது பொதுவாக சிறு முதலீட்டாளர்களுக்கு லாபகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நல்ல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
செகண்டரி சந்தை
சரி பங்கு சந்தைக்குள் நுழைந்தாச்சு? ஆனால் IPO-வில் எல்லாருக்கும் பங்கு கிடைக்குமா? உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 10 கோடி பங்குகளை வெளியிடுகிறது என வைத்துக் கொள்வோம். சில்லறை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என்றால் நிச்சயம் சந்தேகம் தான். ஆக அப்படி கிடைக்காதவர்கள், அதனை இரண்டாம் நிலை சந்தையில் வாங்கலாம். அது தான் செகண்டரி சந்தை என்பார்கள்.
வித்தியாசம் என்ன?
ஐபிஓ-வுக்கும் செகண்டரி மார்கெட்டும் என்ன வித்தியாசம்? எது பெஸ்ட்? எதில் லாபம் அதிகம். ஐபிஓ என்பது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அதனை விற்பனை செய்வார்கள். ஆனால் செகண்டரி மார்க்கெட்டில் ஐபிஓ விலையில் இருந்து கணிசமாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்கு பட்டியலிடப்படும். சில நேரங்களில் ஐபிஓ- விலையை விடவும் குறைவாகவும் கிடைக்கலாம். உதாரணத்திற்கு பேடிஎம் நிறுவன பங்கின் விலையானது இன்று வரையில் ஐபிஓ விலையை விட குறைவாகவே வர்த்தகமாகி வருகின்றது. எனினும் நல்ல நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரும் பாலும் ஐபிஓ விலையை விட பிரீமிய விலையிலேயே செகண்டரி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
எப்படி விற்பனை செய்வது?
ஐபிஓ-வில் ஒரு பங்கினை வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் ஒரு லாபம் கிடைத்து விட்டது. இப்போது லாபத்தினை எடுக்க வேண்டும். அதாவது உங்களது பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். எப்படி செய்வது? ஐபிஓவில் நுழைய வேண்டுமெனில் நீங்கள் டீமேட் கணக்கினை தொடங்கியிருக்க வேண்டும். அப்போது தான் விண்ணப்பித்திருக்க முடியும். நீங்கள் வாங்கியிருக்கும் பங்கினை டீமேட் கணக்கில் வரவு வைத்திருப்பார்கள். இது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, செகண்டரி சந்தையில் வர்த்தகமாவதை பொறுத்து லாபம் நஷ்டம் கிடைக்கும்.
பிரீமியம் விலையில் பட்டியல்
உதாரணத்திற்கு ஒரு பங்கினை ஐபிஓ-வில் 500 ரூபாய்க்கு வாங்குறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது செகண்டரி சந்தையில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றது எனில், உங்களுக்கு கிடைத்த லாபம் 300 ரூபாய் ஆகும். அதெல்லாம் சரி ஒரு நிறுவனம் லாபம் கொடுக்கும் கொடுக்காது என்ற சூட்சுமத்தை எப்படி தெரிந்து கொள்வது? அதனை பின்னர் பார்க்கலாம்.
எப்படி வர்த்தகமாகும்?
பங்கு சந்தைக்குள் நுழைந்தாயிற்று, ஐபிஓ-வில் இருந்து செகண்டரி சந்தைக்குள்ளும் நுழைந்தாயிற்று, இப்போது என்ன செய்யலாம். ஒரு நிறுவனம் வளர்ச்சி விகித கணிப்பு, அத்துறை சார்ந்த முக்கிய தகவல், நிறுவனத்தின் செயல்பாடு இப்படி சிறு சிறு விஷயங்கள் கூட பங்கு விலையில் பெரியளவில் மாற்றத்தினை கொடுக்கும். முதல் நிலை சந்தையில் பங்குகளை நம்மால் வாங்க மட்டுமே முடியும். ஆனால் இரண்டாம் நிலை சந்தையில் வாங்கி விற்கலாம்….முதல் நிலை சந்தையில் வாங்கியதையும் இங்கு விற்பனை செய்து கொள்ளலாம்.
Series on the stock market: what is IPO? what is secondary market with example?
Series on the stock market: what is IPO? what is secondary market with example?/ சீரிஸ் 2 :பங்கு வெளியீடு என்றால் என்ன.. செகண்டரி சந்தை என்ன செய்கிறது.. இது லாபகரமானதா?!