சுவிஸ் நாட்டவர் ஒருவரை ஜேர்மானியர் ஒருவர் கடத்திய நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்யும் முயற்சியின்போது அவர் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம், கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் ஒரு சாதாரண குடிமகன் அல்ல!
அவர் சுவிட்சர்லாந்தின் பெடரல் தடுப்பூசி ஆணையத்தின் தலைவரான Christoph Berger.
நேற்று Berger வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த மாதம் 31ஆம் திகதி ஜேர்மானியர் ஒருவரால் கடத்தப்பட்ட நபர், தான்தான் என தெரிவித்துள்ளார். தன்னைக் கடத்திய அந்த ஜேர்மானியர், பெருந்தொகை ஒன்றைக் கேட்டதாகவும், பணம் கொடுக்காவிட்டால் தன்னைத் கடுமையாகத் தாக்குவேன் என்று மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்னவென்றால், ஜேர்மானியர் ஒருவர், சுவிஸ் நாட்டவர் ஒருவரைக் கடத்திவைத்துக்கொண்டு, அவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஒரு புகார் பொலிசாருக்கு வந்துள்ளது. பின்னர் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சுவிஸ் பொலிசார் அந்த ஜேர்மானியரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் Wallisellen நகரில் இருப்பது தெரியவரவே, அவரைக் கைது செய்வதற்காக அவர் இருந்த வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென துப்பாக்கியை எடுத்து தன்னுடனிருந்த தன் காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் அந்த ஜேர்மானியர். அவரை பொலிசார் கைது செய்யும் நடவடிக்கையின்போது அவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், கடத்தப்பட்டவர் யார் என்ற விடயம் வெளிவராமல் இருந்த நிலையில், கடத்தப்பட்டவரே முன்வந்து தான் தான் கடத்தப்பட்ட நபர் என தெரிவித்துள்ளதைத் தொடர்ந்துதான் விடயம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர் என கருதப்படும் 34 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், Bergerஐக் கடத்தியவர், தடுப்பூசி எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டவர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.