சென்னை:
சொத்து வரி உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இப்போதுதான் மீண்டு வருகிறார்கள். மீண்டும் கொரோனா தொற்று வருமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்ற அறிவிப்பு இருந்தது. ஆனால் தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதில் இருந்து தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது.
சொத்து வரி என்பது அனைத்து வீடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்தாலும் திரும்ப பெற மாட்டோம் என்கிறார்கள். மக்கள் நலன் கருதி தமிழக அரசு தாமதிக்காமல் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.