சென்னை: பொதுமக்கள் எளிதில் கவுன்சிலர்களை தொடர்புகொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய போன் எண்கள் வழங்கி, அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா ராஜன். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் மேயர், சென்னையின் 200 வார்டு கவுன்சிலர்களும் புதிய சிம் கார்டு வாங்கி கொடுத்துள்ளார்.
பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும், அந்தந்த வார்டுகளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ஒரு செல்போன் எண் என வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக இந்த எண்கள் கேட்டு பெறப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 94454 67001 என தொடங்கி 94454 67200 வரையிலும் 200 கவுன்சிலர்களுக்கும் வரிசையாக ஒரே மாதிரியான எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் என்ன விசேஷம் என்றால், இந்த எண்களில் முதல் 7 எண்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். கடைசி 3 எண்கள் மட்டும் அந்தந்த வார்டுகளை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை கவுன்சிலர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அந்த எண்களில்தான் பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் இருக்கும் குறைகளை சொல்ல முன் வருவார்கள் என்பதால், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மேயர் பிரியா ராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே சென்னை மாநகர மேயராக மா.சுப்பிரமணியன் மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் மேயர்களாக இருந்தபோது கவுன்சிலர்களுக்கு செல்போன் எண்கள் வழங்கப்பட்து குறிப்பிடத்தக்கது.