கர்னால்: கடந்த ஏப்ரல் 5ம் தேதி அரியானா மாநிலம் கர்னால் அடுத்த கமால்பூர் ரோடன் பகுதியில் வசித்து வந்த பெற்றோரின் 4 வயது சிறுவன் ஜாஷ் விளையாட சென்ற போது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோரும், கிராம மக்களும் சிறுவன் ஜாஷை பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. சிறுவன் மாயமானது குறித்து சாப்பே-சப்பே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், கடந்த 6ம் தேதி பக்கத்து வீட்டு மேற்கூரையில் ஜாஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்லால் கூறுகையில், ‘சிறுவன் ஜாஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அவரது அத்தை அஞ்சலியை கைது செய்துள்ளோம். இரண்டரை மாத கர்ப்பிணியான அவர், ஜாஷைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். செல்போன் சார்ஜரின் வயரை பயன்படுத்தி ஜாஷை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் சிறுவனின் உடலை படுக்கையில் மறைத்து வைத்தார். கடைசியாக ஜாஷின் உடலை தனது உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து வீட்டின் கூரை மீது உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்தார். கொலைக்கான காரணத்தை அந்தப் பெண் தெரிவிக்கவில்லை. போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.