மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அம்சம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் டாக்குமென்ட்களை பகிர்வது மற்றும் டவுன்லோடு செய்வதை எளிதாக்கும் என தெரிகிறது.
உலக அளவில் பெருவாரியான மக்கள் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ, ஆடியோ, வீடியோ மற்றும் டாக்குமென்ட்களை அனுப்பவும், பெறவும் வாட்ஸ் அப் பயன்படுகிறது. அலுவல் சார்ந்த மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயனர்களை திருப்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொண்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் புதிய அம்சம் ஒன்று வாட்ஸ் அப் பயனர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வாட்ஸ் அப் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் ‘WA பீட்டா இன்போ’ தெரிவித்துள்ளது. இது இப்போதைக்கு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரு டாக்குமென்ட்டை வாட்ஸ் அப்பில் பகிரும்போதோ அல்லது டவுன்லோடு செய்யும் போதோ அதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்ற விவரம் தொடர்பான தகவலை வாட்ஸ் அப் தெரிவிக்குமாம். இது அதிக அளவு சைஸ் கொண்ட பெரிய ஃபைல்களை அனுப்பும்போது பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிகிறது.
முன்னதாக, 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை அனுப்பும் வசதி விரைவில் வாட்ஸ் அப்பில் அறிமுகமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அர்ஜென்டினாவில் இந்த அம்சம் சில பயனர்களுக்கு கிடைத்து வருவதாக தெரிகிறது. அது அனைவரது பயன்பாட்டுக்கும் அறிமுகமாகும்போது இந்த புதிய அம்சம் பயனளிக்கும் என தெரிகிறது.