ட்விட்டர் இயக்குநர் குழுவில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இணைவார் என எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், அவர் ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையவில்லை என்பது இன்று உறுதியாகியிருக்கிறது
ட்விட்டர் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க்கின் நியமனம் குறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், `எலான் மஸ்க்கை எங்கள் குழுவில் நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்கள் இயக்குநர் குழுவுக்கு பெரும் மதிப்பைக் கொண்டு வருவார்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, ஏப்ரல் 9 ஆம் தேதி ட்விட்டர் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று காலையே தான் ட்விட்டர் இயக்குநர் குழுவில் சேரவில்லை என்று தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள பராக் அகர்வால், ‘எங்கள் இயக்குநர் குழுவில் எலான் சேர்வது பற்றி எலானுடன் நேரடியாக பல பேச்சு வார்த்தைகள் நடத்தினோம். இதில் உள்ள சாதக பாதகங்களை அவருக்கு தெளிவுபடுத்தினோம். அதன் பிறகும், அவர் எங்கள் குழுவில் இணைவதில் ஆர்வமாகத்தான் இருந்தார்.
கடந்த 9-ம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டர் இயக்குநர் குழுவில் சேர்வது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று காலையே ட்விட்டர் இயக்குநர் குழுவில் தான் சேரவில்லை என எலான் அறிவித்துவிட்டார். எங்கள் இயக்குநர் குழுவில் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் பங்குகளை வைத்திருக்கும் அவரை எப்போதும் மதிப்போம். எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர்’ என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் இன்று (11/4/22) தனது ட்விட்டர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான 9.2 சதவிகித பங்கு மூலதனத்தை ட்விட்டரில் கொண்டிருக்கும் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.