சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தங்கபெருமாள். இவர் மகன்களான பெரியசாமி, ஆனந்த ராசு ஆகிய இருவரும், அவர்களுடைய குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டோருடன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊருக்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலமாக நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, தங்களது உடைமைகளை சூட்கேஸில் வைத்து வேனின் மேற்பகுதியில் தார்ப்பாய் கொண்டு கட்டி சென்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த பாண்டி என்பவர் வேனை இயக்கியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு அவர்கள் வந்தபோது, வேன் மீதிருந்த இரண்டு சூட்கேஸ்கள் மட்டும் காணாமல் போயிருந்துள்ளன.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், மற்ற சூட்கேஸ்கள் இருக்கும் போது… 264 பவுன் நகைகள் இருந்த இரண்டு சூட்கேஸ்களில் மட்டும் காணாமல் போயுள்ளதாக திருநாவலூர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், வேறு எங்கேனும் வாகனத்தை நிறுத்தினீர்களா? எனக் கேட்டுள்ளனர். அப்போது, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அதிகாலை 2 மணி அளவில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தியதை தெரிவித்துள்ளனர் உடமையை இழந்தவர்கள். எனவே, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனராம். அதில், விக்கிரவாண்டியில் இருந்து வேன் கிளம்பும் வரை சூட்கேஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்கபெருமாள் குடும்பத்தினர் நேற்று மாலை திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் ஆலோசனை பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த காவல்துறை அதிகாரிகள், தங்கபெருமாள் குடும்பத்தினர் மற்றும் வேனை இயக்கியவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நகைகள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? வழியில் தவறி விழுந்ததா? என சந்தேக கோணங்களில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
விசாரணை நிலை குறித்து அறிந்துக் கொள்ள டி.எஸ்.பி மகேஷிடம் பேசினோம். “தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தகவல் தெரிய வந்தததும் தெரிவிக்கிறோம்” என்றார்.
டெம்போ ட்ராவலர் வாகனத்தில், உடைமைகளுடன் வைத்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 264 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.