புதுடெல்லி: அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவரது 17 வயது மகள், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியின் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, பள்ளி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘எங்களது தரப்பில் சிபிஐ விசாரணை கோரவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மதமாற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன். தமிழக காவல் துறையின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது. இந்நிலையில் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு விளக்கம் தர 4 வாரம் அவகாசம் வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.