பெங்களூரு : கர்நாடகாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசியே இல்லை. பல இடங்களிலும் தட்டுப்பாடு நிலவியது.மத்திய அரசின் உத்தரவுபடி, இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற, 18 – 59 வயதினருக்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை, கர்நாடக அரசு நேற்று துவக்கியது.
இதற்காக மாநிலம் முழுவதும், 24 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளில், 40 ஆயிரம் டோஸ் மட்டுமே உள்ளது.மாநிலத்தின் தனியார் தடுப்பூசி மையங்களில், 90 மையங்கள் பெங்களூரிலேயே உள்ளன. சில மாவட்டங்களில், ஒன்று அல்லது இரண்டு மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி மையம் உள்ளது.குடகு, உத்தரகன்னடா, பீதர், யாத்கிர், சித்ரதுர்கா, சிக்கமகளூரு, கோலார், சாம்ராஜ்நகர், கொப்பால், பல்லாரி, ஹாசன் உட்பட, பல்வேறு மேற்பட்ட மாவட்டங்களில், தனியார் மருத்துவமனைகளில் ஒரு மையமும் இல்லை.இம்மாவட்டங்களின் மக்கள், பூஸ்டர் டோஸ் பெற பெங்களூரு வர வேண்டியுள்ளது. தற்போதைக்கு தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் ஊசி மருந்துக்கு பற்றாக்குறை உள்ளது.கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் போது, மக்கள் தடுப்பூசி பெற வருவர் என்ற எதிர்பார்ப்பில், தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக வாங்கி வைத்திருந்தன. ஆனால் அரசு மருத்துவமனைகளில், இலவசமாக தடுப்பூசி போடப்பட்டதால், தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் வரவில்லை.இதன் விளைவாக, இம்மருத்துவமனைகளில் சேகரித்து வைத்திருந்த, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகின.இப்போது தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பின், அரசே இலவசமாக போடக்கூடும் என, தனியார் மருத்துவமனைகள் கருதுகின்றன.எனவே சில நாட்கள் காத்திருந்து பார்க்க, மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன.தனியார் மருத்துவமனை, நர்சிங்ஹோம் அசோசியேஷன் தலைவர் பிரசன்னா கூறியதாவது:மாநிலத்தின் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை. சில பெரிய மருத்துவமனைகளில் மட்டும், 40 முதல் 50 ஆயிரம் டோஸ்கள் இருக்கக்கூடும்.போதிய அளவில் இல்லாததால், அனைத்து மருத்துவமனைகளிலும், முகாம் நடக்காது. அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement