தமிழகத்தில் உள்ள கோவில்களில் 225 கட்டண சேவைகள் வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) கோவில்களில் இணையவழி மூலம்கட்டணச் சேவைகள் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அனைத்து கோவில் சொத்துக்களின் குத்தகை தாரர்கள் மற்றும் வாடகை தாரர்களுக்கு இணைய வழி மூலமும், வசூல் மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் குத்தகை, வாடகைக்தொகை, நாள்தோறும் ஆணையர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், நாளது தேதி வரை ரூ.160 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருக்கோயில்களில் உள்ள கட்டணச் சேவைகள் அனைத்தும், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், திருக்கோயில் கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் பெறுவதற்கு இந்து சமயஅறநிலையத்துறையின் வலைதளத்தில் (www.tnhrce.tn.gov.in)  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டம், அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கியத் திருக்கோயில்களில், அர்ச்சனைக் கட்டணம், அபிஷேகக் கட்டணம், சகஸ்ரநாமம், வாகன பூஜைக் கட்டணம், திருமணக் கட்டணம், சந்தனக்காப்பு, நெய்தீபக் கட்டணம், பரிகாரக் கட்டணம், சர்ப்பதோ‌ஷ பூஜைக் கட்டணம், சண்முகார்ச்சனை, வைரகிரீட சேவைக் கட்டணம், தங்கரதம், வெள்ளி ரத கட்டணம், சனிப்பெயர்ச்சிக் கட்டணம், குருப்பெயர்ச்சிக் கட்டணம், லட்சார்ச்சனைக் கட்டணம், கோடி அர்ச்சனைக் கட்டணம், ரோப்கார் கட்டணம், மின் இழுவை ரயில் கட்டணம், வடைமாலை கட்டணம், பூச்சொரிதல் கட்டணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 255 வகையான சேவைகள், இணையவழி மூலம் முன்பதிவாகவும், திருக்கோயில் கட்டனச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும், ரசீதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு இணையவழியிலும், கோவில்களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகளை, கோவில்களில் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இணையவழியில் கட்டணத்தை செலுத்தியவுடன் ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரசீதுகள் பக்தர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தியதற்கான சரிபார்ப்பு பட்டணைத் தேர்வு செய்து பக்தர்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழி மூலம் முன்பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரசீதினை உபயோகம் செய்தால் போதுமானது. சேவைக்கட்டணம் ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின் அதனை ஆணையர் அலுவலக உதவி மைய தொலைபேசி 04428339999 எண்ணிற்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்,

கோவில் நிருவாகத்தால் சேவைக் கட்டணச்சீட்டு ஒளிவு மறைவற்ற வகையிலும் இருப்பதோடு தொலைதூரப் பக்தர்கள் தங்களது ஆன்மீக பயனத்திட்டத்தினை முன்கூட்டியே செய்து காலவிரயத்தை தவிர்க்க முடியும். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்த்து சிரமமின்றி நிரைவான தரிசனத்தை பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.